வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை! பயணிகள் பதற்றம்... 5 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது
விஜயவாடா ரயில் நிலையத்தில் நரசாப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பாதுகாப்பு கருதி ரயிலில் இருந்து கீழே இறங்கினர்.நரசாப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20678) நேற்று மாலை விஜயவாடா ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயிலின் C4 பெட்டியில் இருந்து புகை வெளியேறியது. இதனை கவனித்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்த பெட்டியை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், ரயிலின் ஆக்சில் அதிகமாக சூடாகியிருந்தது கண்டறியப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே புகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து பயணிகளுக்காக விஜயவாடா ரயில் நிலையத்தில் காத்திருப்பு வசதி, குடிநீர், உணவு மற்றும் உதவி மையம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பயணத்தைத் தொடர விரும்பியவர்களுக்கு மாற்று ரயில் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்த சம்பவத்தின் காரணமாக சென்னை வந்தடையும் பயணத்தில் சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.வந்தே பாரத் ரயிலின் பெட்டியில் இருந்து புகை வெளியேறிய சம்பவத்தால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பதற்றம் நிலவிய நிலையில், ரயில்வே ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.