தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த ஆபரேட்டர் பலி!
கட்டுரை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து பூவரசன் (29) என்ற ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலையில் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த பூவரசன், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதில் மூச்சுத் திணறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பூவரசனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.