விசிக சட்டமன்ற குழு தலைவராக வன்னியரசு தேர்வு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற வன்னி அரசு, தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக, இந்தத் தேர்தலில் 2 இடங்களைக் கைப்பற்றித் தனது பலத்தை நிரூபித்துள்ளது. இந்நிலையில், கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு, தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, விசிக தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை விசிக தலைமை முறைப்படி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, வன்னியரசு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்யின் கரத்தை வலுப்படுத்த உள்ளனர். கொள்கை ரீதியாகத் திமுக கூட்டணியில் நீடித்தாலும், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திண்டிவனம் தொகுதியில் மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்றுள்ள வன்னி அரசுக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது விசிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் விசிக-வின் பங்களிப்பு மற்றும் வன்னியரசுவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய அரசியல் விமர்சகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.