உதவித்தொகைக்காக பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியில், அரசின் உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை வழங்கப் பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஆவராணி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். அவரது மனைவி ரேணுகா (34), அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த உதவித்தொகையைப் பெற்றுத் தருவதற்காகச் சிக்கல் பகுதி கிராம நிர்வாக அதிகாரியான செல்வம் (52) என்பவர், ரேணுகாவிடம் ரூ.7,500 லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேணுகா, இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரேணுகா நேற்று கிராம நிர்வாக அதிகாரி செல்வத்திடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ரேணுகாவிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி செல்வத்தைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அரசு உதவித்தொகை பெற வந்த ஏழைப் பெண்ணிடம் லஞ்சம் வாங்கி அதிகாரி கைதான சம்பவம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.