விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு... 2 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு! 

 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வந்த சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் மணல் கொள்ளை குறித்து விஏஓ லூர்து பிரான்சிஸ் (56) தொடர்ந்து காவல் துறையிலும் வருவாய்த் துறையிலும் புகார் அளித்து நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். இச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக முறப்பநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கலியாவூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (என்ற ராமசுப்பு) மற்றும் அவரது கூட்டாளி மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு, தூத்துக்குடி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகளான ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்றத்தின் தன்மையையும் அதற்கான சான்றுகளையும் சுட்டிக்காட்டி, இருவரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை முற்றிலுமாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.