திருச்சானூரில் ஆக.21-ல் வரலட்சுமி விரத பூஜை - தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவருக்கு முறைப்படி அழைப்பு!

 

திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவிலில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரலட்சுமி விரத பூஜை விமர்சையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

திருச்சானூர் கோவில் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் திருமலையில் உள்ள தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் முகாம் அலுவலகத்திற்குச் சென்று, தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் அவரது மனைவியை நேரில் சந்தித்து வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பி.ஆர். நாயுடுவுக்குப் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பிரசாதங்களை வழங்கி ஆசி தெரிவித்தனர். விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள்:

வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், தடையற்ற தரிசன வரிசை, குடிநீர், அன்னப்பிரசாதம், பாதுகாப்பு, தூய்மை, மருத்துவ வசதிகள் மற்றும் போக்குவரத்துச் சீரமைப்பு ஆகியவற்றைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

பக்தர்கள் ஆன்மிக உணர்வுடன் வழிபட ஏதுவாகத் திருக்கோவிலும் ஆஸ்தான மண்டபமும் வண்ண மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட்டு, பக்தர்கள் அமைதியான சூழலில் விரதத்தைக் கடைப்பிடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.