undefined

சீனாவின் சாதனை முறியடிப்பு - வாரணாசியில் ஒரு மணி நேரத்தில் 2,51,446 மரக்கன்றுகள் நட்டு சாதனை!

 

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ஒரே மணி நேரத்தில் மிக அதிகமான மரக்கன்றுகளை நட்டு இந்தியா புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு மாபெரும் மைல்கல்லாக 2,51,446 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

வாரணாசியின் சுஜாபாத் டோமாரி பகுதியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட மரக்கன்று நடும் இயக்கம், இந்தியாவின் நகர்ப்புற காடு வளர்ப்பு முயற்சியில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. சரியாக 60 நிமிடங்களுக்குள் 2,51,446 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கு முன்பு 2018ம் ஆண்டில் சீனா ஒரே மணி நேரத்தில் 1,53,981 மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை வாரணாசி மிகப்பெரிய வித்தியாசத்தில் முறியடித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ட்ரோன் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் எண்ணும் முறையின் மூலம் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது. கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் முன்னிலையில் இந்தத் தரவுகள் சரிபார்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வாரணாசியை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நடப்பட்ட மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் நகரத்தின் வெப்பத்தைக் குறைக்கவும், காற்றுத் தூய்மையை மேம்படுத்தவும் உதவும்.

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுவது என்பது நிர்வாக ரீதியாக மிகப்பெரிய சவாலாகும். ஆனால், முறையான திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற முயற்சிகள் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும்.