தமிழகத்தில் வருண்குமார், விக்ரமன் உள்ளிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழ்நாடு காவல்துறையில் நிர்வாக நலன் கருதி 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அரசின் புதிய உத்தரவின்படி, நீண்ட நாட்களாகப் பரபரப்பான அரசியல் மற்றும் நிர்வாகக் களத்தில் இருந்த அதிகாரிகள் சிலருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு முக்கிய மாவட்டங்களில் எஸ்பி-யாகப் பணியாற்றி, சமீபத்தில் டிஐஜி-யாகப் பதவி உயர்வு பெற்றிருந்த வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகப் பணியிடம் எதுவும் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த விக்ரமன் ஐபிஎஸ், மிக முக்கியப் பிரிவான சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முகாம் எஸ்பி-யாகப் பணியாற்றி வந்த ரகுபதி ஐபிஎஸ், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் குற்றச்சாட்டுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குறிப்பாகப் பள்ளிக்கரணை போன்ற முக்கியத் துணை ஆணையரகத்திற்குப் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடமாற்ற நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.