தோழிகளுடன் இரவில் வாக்கிங் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - விசிக மாவட்டச் செயலாளர் மகன் கைது!
கோட்டூர்புரம் பகுதியில் சக தோழிகளுடன் இரவு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலக் கல்லூரி மாணவிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், விசிக மாவட்டச் செயலாளரின் மகனைப் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
கோட்டூர்புரத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் எம்.ஏ. படித்து வரும் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஒருவர், அப்பகுதியில் சக தோழிகளுடன் தங்கி உள்ளார். கடந்த 17-ஆம் தேதி இரவு அவர் தோழிகளுடன் நடைபயிற்சி சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டு தப்பியோடினார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தப்பிய நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவருக்குச் சொந்தமான வாகனம் எனத் தெரியவந்தது.
மரக்காணம் சென்று போலீசார் விசாரித்ததில், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விசிக மாவட்டச் செயலாளரான மரக்காணம் நாகராஜின் மகன் அரவிந்த் என்றும், அவர் அடையாறில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருவதும் உறுதி செய்யப்பட்டது.
அரவிந்த் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அரவிந்துக்கு கடந்த 10-ஆம் தேதி தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அரவிந்தைச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.