வீட்டில் 'மினி டாஸ்மாக் பார்' நடத்தி மது விற்ற விசிக நிர்வாகி கைது!
கடலூர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக மது பாட்டில்களைக் கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகியைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடலூர் அம்பலவாணன் பேட்டைப் பகுதியில் உள்ள வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுச் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, அந்த வீட்டை 'மினி டாஸ்மாக்' போல மாற்றி மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக விசிக நிர்வாகியான ராபர்ட் (27) என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.