விஜய்க்கு விசிக நிபந்தனையற்ற ஆதரவு... முட்டுக்கட்டை நீங்கியது - தமிழக முதல்வராகிறார் விஜய்?!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த சஸ்பென்ஸ் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க விசிக தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிவிடுவதா என விசிக தீவிர ஆலோசனையில் இருந்து வந்தது.
தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதை ஏற்று, தவெக ஆட்சி அமைக்க எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரவு அளிக்கத் திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு கடிதத்தை இன்னும் சற்று நேரத்தில் விசிக தரப்பு தவெக தலைமையிடம் வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்க்கு, ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. தற்போது விசிக-வின் ஆதரவும் உறுதியாகியுள்ள நிலையில், தவெக கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 என்ற பெரும்பான்மை பலத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கான அனைத்து சட்ட ரீதியான வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக "மறுதேர்தல்" அல்லது "ஜனாதிபதி ஆட்சி" அமலாகலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், விசிக-வின் இந்த திடீர் நகர்வு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. தவெக தொண்டர்கள் இந்தச் செய்தியைத் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.