ஆ.ராசாவின் சர்ச்சை பதிவுக்கு விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., பதிலடி!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் இணைவதாக அறிவித்ததை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துவிட்டுப் பின்னர் அந்தப் பதிவை நீக்கியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்தச் சர்ச்சை பதிவிற்கு, செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விசிக-வின் மாநிலப் பொருளாளருமான எஸ்.எஸ்.பாலாஜி கவிதை வடிவில் கடுமையான பதிலடியைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா, விசிக மற்றும் அதன் சின்னங்களைக் குறியீடாக வைத்து விமர்சித்ததற்கு, எஸ்.எஸ்.பாலாஜி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் "அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்? ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது!
அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே; அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால், அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்!"
விசிக பொருளாளர் பாலாஜியின் இந்தப் பதிவு, தவெக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் தார்மீக உரிமையை நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது. விசிக போன்ற எளிய மக்களுக்கான கட்சிகள் தற்பொழுது ஆட்சி அதிகாரத்தில் (அமைச்சரவையில்) பங்கு பெறுவதை திமுக-வினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும், அந்த ஆற்றாமையின் காரணமாகவே ஆ.ராசா போன்றவர்கள் அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆ.ராசாவின் அநாகரிகமான விமர்சனங்களுக்குத் தாங்கள்அமைதி காப்பது பலவீனம் அல்ல, அரசியல் நாகரிகத்தைக் காப்பதற்காக மட்டுமே என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து தங்களை நோக்கி அநீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டால், அதற்குரிய உண்மைகளைத் தாங்கள் பேசத் தொடங்கினால், அந்தப் பதிலடியின் வெப்பம் தாங்காமல் திமுகவினர் தகித்துப் போவார்கள் என்று எச்சரிக்கும் தொனியில் அவர் தனது பதிவை முடித்துள்ளார்.
முன்னதாக, தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைவதைக் குறித்து "பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவது" போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆ.ராசா பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்குத் தவெக தகவல் தொழில்நுட்ப அணி, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் மிகக் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்தன. கூட்டணியை முறித்துக் கொண்டதற்காக ஒரு பெண்ணின் ஒழுக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது அநாகரிகத்தின் உச்சம் என விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆ.ராசா, தற்பொழுது தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து அந்தச் சர்ச்சை பதிவை நீக்கியுள்ளார்.
இருப்பினும், அதற்குள் விசிக தரப்பிலிருந்து எஸ்.எஸ்.பாலாஜி கொடுத்துள்ள இந்த அதிரடிப் பதிலடி, திமுக - விசிக இடையேயான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.