தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது வீரபாண்டியன் குற்றச்சாட்டு!

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், அவர் மீதான கட்சியின் முந்தைய ஒழுங்கு நடவடிக்கை குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்சியின் விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட ஒரு நபர் மாற்றுக்கட்சியில் தஞ்சமடைந்துள்ளதன் மூலம் உண்மைகள் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், அக்கட்சியின் கொள்கை பரப்புப் பணிகளில் நீண்ட காலம் ஈடுபட்டு வந்தவருமான சி.மகேந்திரன், அண்மைக்காலமாகத் தவெக ஆட்சி மற்றும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "சி.மகேந்திரன் கட்சியின் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மீறித் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதன் காரணமாகவே அவர் மீது கட்சித் தலைமை முறைப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது" என்று விளக்கமளித்துள்ளார்.

தவறுகளைச் சுட்டிக்காட்டிய பின்பும், சி.மகேந்திரன் அதனைத் திருத்திக் கொள்ள முன்வரவில்லை என்று சாடிய வீரபாண்டியன், "தனது தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, அவர் தற்பொழுது தவெகவில் இணைந்துள்ளார். அவர் தவெகவில் இணைந்த இந்தச் சம்பவத்தின் மூலமாகவே, அவர் மீது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை நூறு சதவீதம் மிகச் சரியானது என்பது தற்பொழுது வெளிப்படையாகவே உறுதியாகியுள்ளது."

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முகம் ஒன்று தவெகவில் ஐக்கியமாகியுள்ளது இடதுசாரி வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநிலச் செயலாளர் வீரபாண்டியனின் இந்த நேரடிக் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.