வெஜ் பிரியாணியில் சிக்கன் பீஸ்...  பிரபல உணவு செயலி நிர்வாகிகளுக்கு பிடிவாரண்ட்!

 

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல தனியார் உணவு விநியோகச் செயலி மூலம் உணவகம் ஒன்றில் சைவ பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த உணவை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதற்குள் கோழித் துண்டுகள் இருப்பதை அறிந்தது அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் முறைப்படி புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50,000 இழப்பீடும் நீதிமன்றச் செலவாக ரூ.5,000 வழங்கிடவும் உத்தரவிட்டது.

ஆனால், குறிப்பிட்ட அந்த உணவு விநியோகச் செயலி நிர்வாகம் நுகர்வோர் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவுகளை மதிக்காமலும், உரியத் தொகையை வழங்காமலும் தொடர்ந்து காலம் கடத்தி அலட்சியம் காட்டி வந்துள்ளது. இதற்கிடையே நுகர்வோர் ஆணையம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும், இறுதி எச்சரிக்கையாக விடுக்கப்பட்ட நேரில் ஆஜராவதற்கான உத்தரவையும் அவர்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.

உணவு நிறுவனத்தின் இத்தகைய தொடர் அலட்சியப் போக்கை மிகக் கடுமையாகக் கருதிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், தற்போது அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள அந்த உணவு விநியோக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், உதவி துணைத்தலைவர், குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சட்ட நடவடிக்கை நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.