சைவ பிரியர்களுக்கு குட் நியூஸ்... அங்கீகரிக்கப்பட்ட உணவு பாக்கெட்டுகளில் ‘வீகன்’ லோகோ!
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவுப் பொருட்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி முழுமையான தாவர உணவு தயாரிப்புகளுக்கு தனித்துவமான முத்திரை கட்டாயமாக்கப்படுகிறது. நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை 2027 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் முறைப்படி அமலுக்கு வர உள்ளது.
அதன் படி 2026 மே 25 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அனுமதி வழங்கப்பட்டவுடன், சைவ உணவின் ஒவ்வொரு பொட்டலத்திலும் இலைச் சின்னம் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட பச்சை நிற "VEGAN" இலச்சினை இடம்பெறச் செய்வது கட்டாயமாக்கப்படும்.உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டும் வகையில், சின்னத்தின் அளவு, அது இடம்பெறும் இடம் மற்றும் வண்ணத் தரநிலைகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடும் விரிவான வரைபடங்கள் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளன
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவின்படி அனுமதி பெற்ற அனைத்து தாவர உணவு பாக்கெட்டுகளிலும் பச்சை நிற முத்திரை இடம்பெற வேண்டும். இலை சின்னத்துடன் கூடிய இந்த முத்திரையின் அளவு மற்றும் வண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான வரைபட வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு அறிவிப்பின் மீது பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு தற்பொழுது இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உணவுப் பொருட்களில் அஸ்வகந்தா மூலிகையைப் பயன்படுத்துவது குறித்தும் புதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அஸ்வகந்தா தாவரத்தின் வேர்கள் மற்றும் அதன் சாறுகளை மட்டுமே குறிப்பிட்ட வரம்புகளுக்குள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் இலைகளையோ அல்லது இலைச் சாறுகளையோ எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரஜித் புன்ஹானி தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை சைவ உணவு பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.