"E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன இன்சூரன்ஸ் செல்லாது" - மத்திய அரசு விளக்கம்!
E20 எத்தனால் கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு ரத்தாகிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் வதந்தி என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. E20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த எத்தனால் கலப்புத் திட்டம் குறித்துப் பல்வேறு முக்கிய விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்கும் திட்டம் நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எத்தனால் கலப்பு முயற்சியின் காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி வளம் சுமார் ரூ.1.4 லட்சம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, E20 எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் பெருமளவு குறைக்கிறது. இதனால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த எத்தனால் கலப்புத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, நேரடியாக உள்நாட்டு விவசாயிகளுக்கும் பெரும் பொருளாதாரப் பலனை அளித்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்குத் தேவையான கரும்பு, சோளம் மற்றும் சேதமடைந்த உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்கிறது.
இதன் காரணமாக, நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதோடு, உள்நாட்டு விவசாயிகளின் வருமானமும் கணிசமாக உயர இது வழிவகுத்துள்ளது என மத்திய அரசு தனது விளக்கத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது. எனவே, எத்தனால் எரிபொருள் குறித்துப் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களை வாகன ஓட்டிகள் புறக்கணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.