விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்... 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்!
விழுப்புரம் அருகே ஐயூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேருந்து மோதியது: விழுப்புரம் ஐயூர் அகரம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த வால்வோ பேருந்து திடீரென மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தின் பின்னால் வந்த கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிப் பலத்த சேதமடைந்தன.
இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் மற்றும் காரில் பயணித்த நபர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.