விடிய விடிய சென்னையை நோக்கி குவியும் வாகனங்கள்.. சிங்கபெருமாள்கோவில் பகுதியில் 2 கி.மீ. தூரத்திற்கு கடுமையான வாகன நெரிசல்!
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை நோக்கித் திரும்பி வருவதால், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வார இறுதித் தொடர் விடுமுறையைக் சொந்த ஊர்களில் கழிக்கச் சென்ற மக்கள், தற்போது விடுமுறை நிறைவடைந்து சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது.
இப்பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வேலைக்குத் திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திக் குறுகிய காலத்தில் வாகனங்களை வழிநடத்தும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.