வேலூரில் அதிகாலை கடும் பனிமூட்டம்! சென்னை - பெங்களூரு சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

 

 

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.19) அதிகாலை முதலே வழக்கத்திற்கு மாறாகக் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாகச் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்குப் பார்வைத்திறன் (Visibility) வெகுவாகக் குறைந்தது.

இதனால் அதிகாலை நேரத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகவும் மெதுவாகச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அடர்ந்த பனிமூட்டத்தால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாகக் களமிறங்கினர்.

அவர்கள் மேற்கொண்ட துரிதமான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் நடவடிக்கைகள் பெரும் விபத்துகளைத் தவிர்க்க உதவியுள்ளன. சுங்கச்சாவடி ஊழியர்களின் இந்தச் சமயோசிதச் செயல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.