கடன் தொல்லையால் விபரீதம்... இளைஞர் தற்கொலை ... !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அணங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் சிவசங்கரன், தீராத கடன் தொல்லை காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், தனது குடும்ப பாரத்தைச் சுமக்க வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்துத் தூங்கிய சிவசங்கரன், அதிகாலையில் மாயமானதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடினர். அப்போது அருகில் இருந்த ஒரு வீட்டில் அவர் தூக்கில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தேவைகளுக்காகச் சிவசங்கரன் வாங்கிய கடன் தொகையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது. தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தாய்க்கும் தம்பிக்கும் ஆதரவாக இருந்த மூத்த மகன் சிவசங்கரனின் மரணம் அந்தக் குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது. கடன் பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வாகாது என்றும், இக்கட்டான நேரத்தில் நண்பர்கள் அல்லது தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.