பிறந்த நாள் கொண்டாடியதை  கண்டித்ததால்  பிளஸ் 2 மாணவி தற்கொலை... பெற்றோர் கதறல்!

 

 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மூத்த மகள் காவியா பொய்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காவியாவிற்குப் பிறந்தநாள் என்பதால் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி எளிய முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இது சம்பந்தமாகப் பெற்றோர் காவியாவைக் கண்டித்ததாக முறைப்படி கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவியா நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். திருநாவுக்கரசு, அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளும் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த காவியா மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காவியாவை மீட்டபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.