தவெக ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறது... திமுக கொறடா எ.வ.வேலு ஆவேசம்! 

 

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தற்போதைய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் தகுந்த பதிலளிப்பார் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகத் தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் தொடர்பான விமரிசனங்களை அவை விதிகளை மீறி முதலமைச்சர் முழுமையாகப் படித்ததாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் மிசா கொடுமையை அனுபவித்த தலைவர் நடத்தியது உண்மையான ஆட்சி என்றும், தற்போதைய ஆட்சி ரீல்ஸ் எடுப்பதற்காக மட்டுமே சினிமா பாணியில் நடப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட பழைய விவகாரங்கள் குறித்து ஏற்கனவே பலமுறை விளக்கங்கள் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் எ.வ.வேலு சுட்டிக்காட்டினார். இது தவிர பெண் எம்.எல்.ஏ.க்கள் குறித்த முந்தைய வரலாறுகளை மறந்துவிட்டுத் தவறான தகவல்களுடன் ரீல்ஸ் பரப்புவதாகவும் அவர் தன் பேட்டியில் குற்றம் சாட்டினார்.