வெனிசுலாவில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு; பலி எண்ணிக்கை 2,295 ஆக உயர்வு - 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு!

 

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிகழ்ந்துள்ள மிகக் கொடூரமான இயற்கைச் சீற்றம் ஒட்டுமொத்த உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெனிசுலாவின் வட மத்தியப் பகுதியைத் தாக்கிய அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால்ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்த புதிய மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

வெனிசுலாவின் யாராகுய் மாநிலத்தை மையமாகக் கொண்டு கடந்த வாரம் புதன்கிழமை மாலை 6 மணியளவில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.  முதலில் ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவான ஒரு முன்னதிர்வைத் தொடர்ந்து, அடுத்த 39-ஆவது விநாடியிலேயே மிகக் கொடூரமான முறையில் 7.5 ரிக்டர் அளவில் முதன்மை நிலநடுக்கம் தாக்கியது. 1900-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலான வெனிசுலாவின் வரலாற்றில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் இதுவாகும்.

ஜூன் 24 முதல் இன்று வரை கடந்த 8 நாட்களில் மட்டும் அந்தப் பகுதியில் சுமார் 782 முறை தொடர்ச்சியான பின்அதிர்வுகள் பதிவாகி மக்களை உறைபனியில் ஆழ்த்தியுள்ளன. வெனிசுலா தேசிய நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தினசரி அறிக்கையின்படி, மீட்புப் பணிகள் தீவிரமடையத் தீவிரமடையப் பலி எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இடிபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11,267-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துறைமுக நகரான லா குவைரா மற்றும் தலைநகர் காரகாஸ் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், 38-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உட்பட 2,500-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் அந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பொருளாதார இழப்பு சுமார் ₹9 லட்சம் கோடி ($100 பில்லியனுக்கும் அதிகம்) இருக்கும் எனப் பூர்வாங்க ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய இக்கட்டான சூழலில், வீடிழந்த 12,000-க்கும் மேற்பட்ட மக்களுக்காகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 25 தற்காலிக அவசரக்கால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மீட்புப் படையினருடன் இணைந்து 50-க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 4,000-க்கும் அதிகமான பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இரவும் பகலுமாக இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். சுமார் 6,400-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருப்பதால் பலி எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் பேரழிவில் உயிரிழந்த தங்களது நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் 7 நாட்களுக்குத் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.