அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு... வென்டிலேட்டர் வெடித்து 3 குழந்தைகள் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
மராட்டிய மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையின் 3-வது தளத்தில் குழந்தைகள் பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் வென்டிலேட்டர் வசதியுடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 39 பச்சிளம் குழந்தைகள் இருந்த அந்த அறையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வென்டிலேட்டர் வெடித்துப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பச்சிளம் குழந்தைகள் சிக்கிக்கொண்டன. உடனே விரைந்து செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், பச்சிளம் குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனாலும், இந்த கோர விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, படுகாயமடைந்த அந்த 6 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குத் தற்போது அந்தக் குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது.