பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் - திரையுலகினர் நேரில் அஞ்சலி!

 

பல்வேறு மொழித் திரைப்படங்களில் முத்திரை பதித்த பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் கதாசிரியர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

தமிழில் 'ராஜபார்வை', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்', 'சின்ன வாத்தியார்', 'காதலா காதலா', 'லிட்டில் ஜான்', 'மும்பை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட பல முக்கியப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் திறம்படப் படங்களை இயக்கியுள்ளார்.

தனது 90 வயதைக் கடந்த நிலையிலும் சினிமா மீதான காதலைக் கைவிடாமல், சமீபத்தில் 'சிங் கீதம்' என்ற பான் இந்தியா திரைப்படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர்.

அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.