வெற்றி மகளிர் ஆடு, கறவை மாடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம்!
தமிழக அரசின் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தில்' பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2026-27ம் நிதியாண்டில், கிராமப்புறங்களில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் 30 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். இதற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்திலும், விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திலும் பயன்பெற ஆதார் எண் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் இன்னும் கிடைக்காதவர்கள், பதிவு ரசீதுடன் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட மாற்று ஆவணங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
மேலும், ஆதார் சரிபார்ப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் தகுதியானவர்களுக்கு திட்டப் பலன்கள் மறுக்கப்படக் கூடாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.