‘வெற்றி வீடு திட்டம்’.. 5,00,000 கான்கிரீட் வீடுகள்; முதற்கட்டமாக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு!

 

தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசசிக்கும் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெற்றி வீடு திட்டத்திற்காக’ முதற்கட்டமாக ரூ.3,500 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடிசை வீடுகளையும் அகற்றி, ஏழை எளிய மக்கள் அனைவரும் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளில் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் ‘வெற்றி வீடு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் மொத்தம் 5 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் 2026-27-ஆம் நிதியாண்டில் முதற்கட்டமாக 70,000 வீடுகளைக் கட்டுவதற்காக ரூ.3,500 கோடியைத் தமிழக அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வளர்ந்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவித் தொகையை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. இது வரை ஒரு வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவித் தொகையான ரூ.3.10 லட்சம், தற்போது இத்திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான தகுதியான பயனாளிகளைக் கண்டறியும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தகுதியான குடிசை வாழ் குடும்பங்களைக் கண்டறிவதற்காக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மூலம் விரைவில் மாநில அளவிலான விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்புக்குப் பின் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விரைவாகக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.