2 நாள் பயணமாகத் தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் - முழு பயணத் திட்டம்!
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 நாள் அரசு முறைப் பயணமாகத் தமிழகம் வரவுள்ளார். செங்கல்பட்டு, சென்னை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலை தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் நடைபெறும் சிறப்புப் புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
ஆகஸ்ட் 17 அன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாகத் திருவாரூர் சென்றடைகிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தஞ்சை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டுச் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.