ஆந்திராவில் தவெக வெற்றி விழா.. பட்டாசு வெடித்து ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர்கள் கொண்டாட்டம்... விஜய்க்காகத் திருப்பதியில் 116 சிதறு தேங்காய்கள் உடைப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறவுள்ள நிலையில், இதன் தாக்கம் ஆந்திர அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இந்த வெற்றியைத் தங்களது வெற்றியாகவே கொண்டாடி வருகின்றனர்.
ஆந்திராவின் பல்வேறு நகரங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு, தவெக-வின் வெற்றியைக் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். குறிப்பாக, ஜெகன் மோகன் ரெட்டியும் விஜய்யும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, "ஜெய் விஜய்.. ஜெய் ஜெகன்" என முழக்கமிட்டனர். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தேர்தல் வியூகங்கள், ஜெகன் மோகன் ரெட்டியின் பாணியைப் பிரதிபலிப்பதாகக் கருதும் தொண்டர்கள், இந்த வெற்றியை ஒரு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கின்றனர்.
விஜய்யின் வெற்றிக்காக ஆந்திரத் தொண்டர்கள் முன்னதாகவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டிக்கொண்டிருந்தனர். இன்று தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள கோவிலில் 116 சிதறு தேங்காய்களை உடைத்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
நடிகர் விஜய்யின் இந்த வெற்றி ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத் தொடர்பையும் தாண்டி, விஜய்யின் "மக்களுக்கான அரசியல்" என்ற முழக்கம் அண்டை மாநில இளைஞர்களையும் ஈர்த்துள்ளதையே இத்தகைய கொண்டாட்டங்கள் காட்டுகின்றன.