பகீர் வீடியோ... ஸ்கூட்டர் சறுக்கி விழுந்து ரோடு ரோலர் ஏறியதில் 19 வயது இளம்பெண் பலி!
குஜராத் மாநிலத்தில் மழைநீரால் சறுக்கிய ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்த இளம்பெண் மீது ரோடு ரோலர் வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள தண்டல்ஜா பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஒரே ஆக்டிவா ஸ்கூட்டரில் தோழிகளான 3 இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து சென்று கொண்டிருந்த போது, மழைநீரால் ஈரமாக இருந்த சாலையில் அவர்களது ஆக்டிவா ஸ்கூட்டர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் சறுக்கி விழுந்தது.
ஸ்கூட்டர் எதிர்பாராமல் சறுக்கி கவிழ்ந்ததில் ஆக்டிவாவில் அமர்ந்திருந்த 3 பெண்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அதே சாலையில் இவர்களது ஆக்டிவா வாகனத்திற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ரோடு ரோலர் வாகனம், எதிர்பாராத விதமாக 19 வயது இளம்பெண் மீது ஏறி இறங்கியது. இதில் அந்த இளம்பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த மற்ற 2 பெண்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.