பகீர் வீடியோ.... துணிக்கடை ‘ட்ரயல்’ ரூமில் 18 வயது காதலியைக் கழுத்தறுத்துக் கொன்று விட்டு தப்பியோடிய காதலன்!

 

டெல்லியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் உடைமாற்றும் அறையில், 18 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மோதி நகர் மெட்ரோ நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக்கடை ஒன்றில் ஷப்னம் (18) என்ற இளம்பெண் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல் சனிக்கிழமை இரவு தனது பணி நேரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்படுவதற்கு அவர் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ஷப்னத்தின் ஆண் நண்பரான சூரஜ் என்பவர் ஜவுளிக்கடைக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் கடையில் இருந்த உடைமாற்றும் அறைக்குள் சென்று தனியாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சூரஜ் பதற்றத்துடன் அங்கிருந்து வேகமாக வெளியேறித் தப்பியோடியுள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/hsESEB_Ay48?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/hsESEB_Ay48/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

சூரஜின் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கையைக் கண்ட சக ஊழியர்கள், உடனடியாக உடைமாற்றும் அறைக்குள் சென்று பார்த்த போது, ஷப்னம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மீட்கப்பட்ட ஷப்னம் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்துத் தப்பியோடிய சூரஜைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே சூரஜை மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சூரஜிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரஜ் மற்றும் ஷப்னம் ஆகிய இருவரும் ஏற்கனவே நெருங்கிப் பழகி வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மற்றும் தகராறு ஏற்பட்டுப் பிரிந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடும் ஆத்திரத்திலேயே, ஷப்னம் பணிபுரியும் இடத்திற்கு வந்து அவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த வணிக வளாகப் பகுதியில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் சக ஊழியர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.