மகளுடன் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியீடு.. பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார்!
பிரபல போஜ்புரி நடிகையான அஞ்சனா சிங், தனக்கும் தனது 11 வயது மகளுக்கும் எதிராகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக லக்னோ சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அஞ்சனா சிங் அளித்துள்ள புகாரில், கடந்த சில நாட்களாகத் தன்னுடைய மற்றும் தனது 11 வயது மகளின் உருவங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் போலியாக உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய ஆபாசப் படங்களைப் பரப்புவதோடு மட்டுமல்லாமல், தனக்கும் தனது மகளுக்கும் இணைய வழியில் கொலை மிரட்டல்களும், ஆபாசமான மொழியிலான வசவுகளும் வந்து கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபல போஜ்புரி நடிகர் மற்றும் பாடகரான கேசாரி லால் யாதவ் மற்றும் அவரது குழுவினர் மீது அஞ்சனா சிங் நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளார்: கேசாரி லால் யாதவின் மேலாளர் அகிலேஷ் காஷ்யப் என்பவர் தான் இத்தகைய அவதூறுப் பிரச்சாரத்தின் பின்னணியில் நின்று தங்களை அச்சுறுத்தி வருவதாக அஞ்சனா சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேசாரி லால் யாதவின் குழுவைச் சேர்ந்தவர்கள் அஞ்சனா சிங் மற்றும் அவரது மகளை இழிவுபடுத்தும் வகையில் பாடல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை அஞ்சனா சிங் செய்தியாளர்களிடம் பேசிய போது, "நான் உத்தரப் பிரதேசத்தின் மகள். அம்மாநில அரசு மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்திப் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் நபர்கள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.