பகீர் வீடியோ... 3,500 அடி ஆழப் பள்ளத்தாக்கில் ஜிப்லைனில் சிக்கிய பயணி - உயிரைப் பணயம் வைத்து மீட்ட பணியாளர்!
மகாராஷ்டிர மாநிலத்தில் 3,500 அடி ஆழப் பள்ளத்தாக்கின் மேலே ஜிப்லைனில் சாகசம் செய்தபோது அந்தரத்தில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணியை, மையப் பணியாளர் ஒருவர் மின்னல் வேகத்தில் சென்று பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தோரன்மால் மலைப்பிரதேசத்தில், 'சீதாகாய் பாயிண்ட்' பகுதியில் புதிதாக ஜிப்லைன் சாகசத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணி ஒருவர் 3,500 அடி ஆழப் பள்ளத்தாக்கின் குறுக்கே ஜிப்லைனில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் பள்ளத்தாக்கின் நடுவே நகர முடியாமல் அந்தரத்திலேயே தொங்கும் நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சமடைந்தனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஜிப்லைன் மையத்தின் பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர் ஒருவர், நிலைமையின் தீவிர உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டார்.
தனது சொந்த உயிரையும் பொருட்படுத்தாமல், அதே ஜிப்லைன் கயிற்றின் வழியே சறுக்கிக் கொண்டு அந்தரத்தில் தவித்த பயணியை நோக்கி விரைந்தார். பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாகச் செயல்பட்ட அவர், பயணியைப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டு தரைப்பகுதிக்கு அழைத்து வந்தார்.
நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. இந்தத் திக் திக் நிமிடங்கள் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற சாகசத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.