பகீர் வீடியோ... ஐபோனுக்காக மகன் தற்கொலை; காப்பாற்ற முயன்ற பெற்றோரும் உயிரிழந்த கொடூரம்!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன் தவணைத் தொகையைச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட தகராறில், 18 வயது இளைஞர் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற பெற்றோரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த குணால் சந்கூடே (18) என்ற இளைஞர் சமீபத்தில் தவணை முறையில் புதிய ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். வாடகை கார் ஓட்டுநரான தந்தை முரளிதரிடம் தவணைப் பணத்தைக் கேட்டு குணால் தகராறு செய்துள்ளார். குடும்ப நிதி நெருக்கடி காரணமாகப் பணம் கொடுக்க முடியாததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குணால், அருகில் உள்ள கவ்டியா மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து வந்த பெற்றோர், கிராம மக்கள், பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் காவல்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். பஞ்சாயத்துத் தலைவர் தவணைப் பணத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறியும் இளைஞர் அதைக் கேட்கவில்லை.

மலையின் அடிவாரத்தில் இருந்த தந்தை முரளிதர் மேலே ஏறி மகனிடம் பேச முயன்றபோது, குணால் திடீரெனக் கீழே குதித்தார். அப்போது மகனின் கையைப் பிடித்துக் காப்பாற்ற முயன்ற தந்தை முரளிதரும் நிலைதடுமாறி மகனுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கண்முன்னே கணவனும் மகனும் கீழே விழுந்து உயிரிழந்த பேரதிர்ச்சியில், தாய் சங்கீதாவும் அதே மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். ஒரே நிமிடத்தில் குடும்பமே துயரமாக முடிந்த இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.