நடுவானில் திடீர் எந்திர கோளாறு!   சென்னையில் அவசரமாக தரையிறங்கிய வியட்ஜெட் விமானம்.. 152 பேர் பத்திரம்!

 

 

வியட்நாமின் ஹோ சி மின் சிட்டியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி சென்ற VietJet விமானத்தின் ஒரு எந்திரத்தில் நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.VietJet நிறுவனத்தின் VJ1875 விமானம் ஹோ சி மின் சிட்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. Airbus A320 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 143 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 152 பேர் இருந்தனர்.

விமானம் சென்னைக்கு அருகே வங்கக்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது விமானம் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதும், விமானத்தை தொடர்ந்து கொழும்பு நோக்கி இயக்குவதற்குப் பதிலாக அருகிலுள்ள பாதுகாப்பான விமான நிலையமான சென்னைக்கு விமானத்தை திருப்ப விமானிகள் முடிவு செய்தனர். இதற்காக சென்னை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு அவசர தரையிறக்க அனுமதி கோரினர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு 9.55 மணியளவில் விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், விமானம் இரவு 10.27 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் விமானம் தனது சொந்த சக்தியிலேயே குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிக்கு சென்றது.விமானத்தில் இருந்த 152 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கிடையே விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து, எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.விமானம் நடுவானில் எந்திரக் கோளாறை சந்தித்த போதிலும், விமானிகளின் நடவடிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.