டாஸ்மாக் முறைகேடு வழக்கில்  தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

 

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஜூலை 29ம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் 41 முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான முக்கிய அலுவலகங்கள், மதுபான ஆலைகள் மற்றும் அது சார்ந்த நபர்களின் வீடுகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கும் நோக்கில் அதிகாரிகள் இந்தத் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாகக் கோவை மாவட்டத்தில் உள்ள பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகளில் சோதனை தீவிரமடைந்துள்ளது. அதேபோலக் கோவையில் இயங்கி வரும் முன்னணி நிறுவனமான சிவாஸ் மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். கிடங்குகளில் உள்ள இருப்புகள், விற்பனைக் கணக்குகள் மற்றும் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தத் திடீர் சோதனைகளின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்குப்பக்கங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து அந்த ஆலையின் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஆலையின் உற்பத்தி கணக்குகள், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 41 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த அதிரடி சோதனை அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.