மதுராந்தகத்தில் இன்று முதல்வர் விஜய் ரோடு ஷோ! 45 கி.மீ. பயணம் - முழு வழித்தடம் இதோ
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் இன்று (அக்.2) சுமார் 45 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ நடத்துகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த பயணம் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் இந்த பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
செங்கல்பட்டு மாவட்ட எல்லையான மாமண்டூரில் தொடங்கும் ரோடு ஷோ, படாளம், கருங்குழி, மதுராந்தகம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று அச்சரப்பாக்கத்தில் நிறைவடைய உள்ளது. வழியில் சுமார் 39 முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரோடு ஷோவுக்கு முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் விஜய் வழிபாடு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ரோடு ஷோவை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இதனால் இன்று மாலை மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுவது அவசியமாகும்.