பனையூர் வந்தடைந்தார் விஜய்... 233 தொகுதி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை!
தமிழக அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளில், தவெக சார்பில் போட்டியிட்ட 233 வேட்பாளர்களும் (ஒரு தொகுதியில் கூட்டணி அல்லது ஆதரவு அடிப்படையில்) இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அலுவலகம் வந்து சேர்ந்த நிலையில், தலைவர் விஜய் தற்போது வருகை தந்து ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்கு சதவீதம், தவெக-விற்குக் கிடைத்துள்ள ஆதரவு மற்றும் களத்தில் நிலவிய சவால்கள் குறித்து வேட்பாளர்களிடம் விஜய் நேரடியாகக் கேட்டறிந்து வருகிறார். பெரும்பாலான கணிப்புகள் தவெக 15 முதல் 25 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறியுள்ள நிலையில், தங்களது உத்தேச வெற்றி வாய்ப்புகள் குறித்து வேட்பாளர்களுடன் அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தவெக முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், விழிப்புணர்வு மற்றும் இறுதிவரை வாக்கு எண்ணிக்கையை முறையாகக் கண்காணிப்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
ஒருவேளை தொங்கு சட்டசபை உருவானால், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ரகசியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைவர் விஜய்யின் வருகையை ஒட்டி, பனையூர் அலுவலகத்தைச் சுற்றிலும் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்துள்ள உற்சாகத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கு, இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.