"விஜய் அண்ணா... எங்க வீட்ட இடிக்க சொன்னது நீங்க தானா? வோட்டு போட்டதுக்கு இது தான் நன்றிக்கடனா?" - கதறும் இளம்பெண்... வைரலாகும் வீடியோ!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 29 வீடுகளை வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அரசுக்கு எதிரான பொதுமக்கள் சிலரின் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடிழந்த பெண் ஒருவர் முதலமைச்சர் விஜய்யை நோக்கி கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஓசூர் அருகே உள்ள தும்பனப்பள்ளி கிராமம், முனீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள கல்லாங்குத்து அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது: சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான அரசுப் புறம்போக்கு நிலத்தில் தனிநபர்களால் 29 கான்கிரீட் மற்றும் சீட் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் குடியேறியுள்ளனர்.

தங்கள் கண் முன்னே வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டு, அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் செய்வது அறியாது வீதிகளில் அமர்ந்து கதறி அழுதனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊடகங்கள் வாயிலாக முதலமைச்சர் விஜய்யிடம் எழுப்பியுள்ள உருக்கமான கேள்விகள் வைரலாகி வருகின்றன. 

"விஜய் அண்ணா... நீங்கதான் எங்க வீட்டையெல்லாம் இடிக்கச் சொல்லி ஆர்டர் போட்டீங்களா? எங்களோட வீடுகளை இப்படி இடிச்சு தரைமட்டமாக்குறதுக்குத் தான் உங்களை நாங்க முதலமைச்சர் நாற்காலியில உட்கார வச்சோமா? உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதற்கு இதுதான் நீங்க காட்டுற நன்றிக்கடனா? வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு, குழந்தைகளைத் தெருவுல நிக்க வச்சு இடிச்சது எந்த விதத்துல நியாயம்? நீங்களே நேர்ல வந்து இங்க இருக்குற நிலைமையைப் பாருங்கண்ணா..." என்று கண்ணீர் மல்கக் கதறினார்.

தங்களது நிலை குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், "இந்தப் பகுதியில் ஏற்கனவே பலருக்கு அரசு முறையாகப் பட்டா வழங்கியுள்ளது. அதனால், நமக்கும் எப்படியாவது அரசு பட்டா வழங்கி விடும் என்ற நம்பிக்கையில் தான் கடனை வாங்கி இந்த வீடுகளைக் கட்டி குடியேறினோம். ஆனால், பட்டா தராமல் திடீரென வீடுகளை இடித்து எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர்" என வேதனை தெரிவித்தனர்.

தலை சாய்க்க இடமின்றித் தவிக்கும் தங்களுக்கு அரசு உடனடியாக மாற்று இடமும், உரிய நிவாரணமும் வழங்கி உதவ வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஏழை எளிய மக்களின் வீடுகள் இடிக்கப்படும் இத்தகைய சம்பவங்கள், ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்குப் புதிய சவாலாக உருவெடுத்து வருகிறது.