‘பாட்டிலுக்கு ₹10 வசூல்’ - டாஸ்மாக் விவகாரத்தைக் கையிலெடுத்த விஜய்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகளில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 வசூலிக்கப்படுவதாக நீண்ட நாட்களாகவே மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அதிரடியான கண்காணிப்பு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் நடக்கும் இந்த முறைகேடுகளைக் கண்காணித்து, தவறு செய்யும் பணியாளர்கள் மற்றும் அதற்குத் துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகப் புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாகப் பணம் வாங்கும் கடைகளைக் கண்டறியும் பொறுப்பு உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கடைகளில் இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன என்பதை ரகசியமாகக் கண்காணித்து, அதுகுறித்த விரிவான பட்டியலை உடனே அறிக்கையாகத் தாக்கல் செய்யச் சென்னை காவல் துறை உளவுப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இந்தக் கண்காணிப்பு முறையைத் தீவிரப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட வாரியாக உள்ள உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், டாஸ்மாக் கடைகளில் ரகசியக் சோதனைகளை மேற்கொண்டு, பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய கூடுதல் வசூல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி உத்தரவு டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.