"மனைவியை விரட்டி விஜய்... பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுறாரு? - அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "தனது மனைவி, மகள் மற்றும் மகனின் நிலையைப் பற்றிச் சிந்திக்காமல், அவர்களைப் பிரிந்து வாழும் விஜய், மேடைகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது நகைப்பிற்குரியது. மனைவியையே விரட்டியவர் எப்படிப் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவார்?
கரூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட விஜய்க்கு நேரமில்லை. மக்களின் துயரங்களில் பங்கெடுக்காதவர் எப்படி மக்கள் தலைவராக முடியும்?" என விமர்சித்தார்.
"பாஜக அரசு சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், அதைக் கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது ஏன்? அவர் யாருக்குப் பயப்படுகிறார்?" என வினவினார். "சமீபத்தில் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்குக் கூட வாய் திறக்காத விஜய், எப்படி ஒரு ஜனநாயக ஆட்சியை நடத்தப் போகிறார்?" என்றும் அவர் விமர்சித்தார்.
திமுக மற்றும் தவெக இடையே தேர்தல் நெருங்கும் வேளையில் வார்த்தைப் போர் முற்றியுள்ளது. ஏற்கனவே ரஞ்சனா நாச்சியார் போன்ற முன்னாள் தவெக நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், ஒரு பெண் அமைச்சரே விஜய்யின் குடும்ப விவகாரங்களை முன்னிறுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.