நமக்கும் ஸ்டாலின் சாருக்கும் தான் மோதல் - வேட்பாளர் அறிமுகத்தில் விஜய் அதிரடி!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளை ஓரம் தள்ளிவிட்டு, திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக நடிகர் விஜய் பிரகடனம் செய்துள்ளார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய விஜய், "இவர்கள் வெறும் வேட்பாளர்கள் அல்ல; மக்களுக்கான காப்பாளர்கள். மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்த இவர்கள்தான் மக்களின் எல்லைக் காப்பாளர்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அனுபவம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளைச் சாடிய விஜய், "எம்.எல்.ஏ-வாக இருக்க அனுபவம் மட்டும் போதாது. அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது. அனுபவம் மிக்க திமுக எம்.எல்.ஏ ஒருவர் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்றதை நாடு அறியும்" என நேரடியாகத் திமுகவைச் சாடினார்.

திமுகவின் கூட்டணியை "உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்தது போன்றது" என விமர்சித்த அவர், தவெக-வின் பலமே அதன் நேர்மை தான் எனத் தெரிவித்தார்.

தமிழக அரசியல் களத்தில் நிலவும் மும்முனை அல்லது பலமுனைப் போட்டி என்ற பேச்சைத் தகர்க்கும் விதமாக விஜய் பேசுகையில், "இந்தச் சட்டமன்றத் தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். அது நமக்கும் (தவெக) மற்றும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையில்தான். எல்லா இடத்திலும் நானே வந்து நிற்க முடியாது என்பதால் தான், மக்களுக்காக உழைக்க இந்தத் தம்பிகளைத் தேர்வு செய்துள்ளேன்."

தமிழகத்தின் 234 தொகுதிகள் மட்டுமின்றி, புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுவதையும், அந்த வேட்பாளர்களுக்கான முழு ஆதரவையும் விஜய் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.