“விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை!” - வைகோ ஆதரவு!
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில், அவரது அரசை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதே சமயம் திமுக கூட்டணியில் நீடிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 'குதிரை பேர' புகார்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதிமுக-வின் ஒரு தரப்பு ஆதரவு கொடுப்பதற்கு முன்பே, அவருக்குத் தேவையான பெரும்பான்மை இருந்தது. எனவே, இதில் முறையற்ற பேரங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை."
"இதுவரை எந்த முதலமைச்சரும் எனது இல்லத்திற்கு வந்ததில்லை" என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் அணுகுமுறை மற்றும் மரியாதையைச் சுட்டிக்காட்டினார். புதிய அரசுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளையும் வைகோ முன்வைத்துள்ளார். "ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதுவே மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு" என அவர் வலியுறுத்தினார்.
கூட்டணி மற்றும் வரும் கால அரசியல் குறித்து அவர் பேசுகையில், "நாங்கள் இப்போதும் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம். எங்களது தோழமை நீடிக்கிறது. விஜய் அரசின் செயல்பாடுகளை திமுகவைப் போலவே நாங்களும் அடுத்த 6 மாதங்களுக்கு உற்றுநோக்குவோம். அதன் பிறகே எங்களது அடுத்தகட்ட நிலைப்பாட்டை முடிவு செய்வோம். இப்போதைக்கு விஜய்க்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்று கூற முடியாது" எனத் தெரிவித்தார். ஏற்கனவே விஜய் முதல்வராகப் பதவியேற்ற போதே அவரை வரவேற்ற வைகோ, இப்போதும் அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.