ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் விஜய்... கூட்டணி வியூகத்தில் தொடர்ந்து சறுக்கல்?!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அமமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான ஆரம்பகட்ட வாய்ப்புகள் இருந்தும், ஆதவ் அர்ஜுனா தரப்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அந்தப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது தவெகவின் பலத்தை மிகைப்படுத்திக் காட்டியது மற்றும் மற்ற கட்சிகளை முறையாக அணுகாதது போன்ற ஆதவ் அர்ஜுனாவின் அணுகுமுறை கூட்டணிக் கனவுக்குத் தடையாக இருந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பல முக்கியக் கட்சிகள் திமுக அல்லது அதிமுக கூட்டணிகளில் இணைந்துள்ள நிலையில், தவெக எதிர்பார்த்த பலமான கூட்டணி இன்னும் அமையவில்லை. இதனால் தேர்தல் களத்தில் தனித்து விடப்படும் சூழல் உருவாகியுள்ளதே விஜய்யின் ஆதங்கத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தவெக அடுத்த 25 ஆண்டுகால அரசியலுக்கான திட்டத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "கூட்டணி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிவாகும் விஷயம் அல்ல; சரியான நேரத்தில் சரியான முடிவை தலைவர் விஜய் எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார். 

தற்போது விஜய், தனது கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாகத் தஞ்சாவூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் நடந்த கூட்டங்களில், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் இலவசக் கல்வி போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அவர் அறிவித்துள்ளார். கூட்டணி சறுக்கல்களைத் தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் சரிசெய்ய அவர் திட்டமிட்டு வருவதாக தவெக தொண்டர்கள் காதைக் கடிக்கிறார்கள்.