“விஜய் கத்துக்குட்டி... அரசியலில் ரீ-டேக் எல்லாம் எடுக்க முடியாது!” - ஆர்த்தி கணேஷ் விமர்சனம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பிரச்சாரத்தில் தகித்து வரும் நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி கணேஷ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து முன்வைத்த விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வி.ஜி.ராஜேந்திரன் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், என்.ஜி.ஓ காலனி பகுதியில் நடிகை ஆர்த்தி கணேஷ் மற்றும் நடிகர் ராஜ்காந்த் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட ஆர்த்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்த்தி கணேஷ், விஜய்யைத் தீவிரமாக விமர்சித்தார். "விஜய் சினிமாவில் 50 வருடங்களாக இருக்கலாம். அவருக்கு நடனம், சண்டை மற்றும் நடிப்பு நன்றாகத் தெரியும். ஆனால், அவர் ஒரு கதாபாத்திரமாக வாழத் தெரிந்தவரே தவிர, சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகிய அனுபவம் அவருக்கு இல்லை. அவருக்குத் தமிழ்நாட்டைச் சுற்றி வர நேரமில்லை; வெயில் என்றால் அவருக்கு அலர்ஜி ஆகிறது, விரைவில் உடல் சோர்வடைந்து விடுகிறார்."
அரசியல் என்பது திரைத்துறை போன்றது அல்ல என்பதை வலியுறுத்திய ஆர்த்தி, "அரசியல் என்பது சினிமா கிடையாது, இங்கு எதற்கும் 'ரீ-டேக்' எடுக்க முடியாது. சினிமாவில் சைக்கிள் ஓட்டத் தெரியவில்லை என்றால் மறுநாள் பழகிக் கொண்டு நடித்து விடலாம். ஆனால் அரசியல் அப்படிப்பட்டதல்ல. இங்கு 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்க வேண்டும்" என்றார்.
மேலும், கடந்த கால நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்ட அவர், கரூரில் நடந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்தும், அனுபவம் இல்லாத காரணத்தால் விஜய் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டினார்.
விஜய் தனது ரசிகர்களை நல்வழியில் நடத்த வேண்டும் எனத் தெரிவித்த ஆர்த்தி, வெறும் விசில் அடித்து, ரசிகர்களுடன் 'ஃபன்' செய்து கூட்டத்தைச் சேர்ப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. ரசிகர்களின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறை இருக்க வேண்டும். மக்கள் செல்வாக்கு என்பது வெறும் கூட்டத்தை வைத்து முடிவெடுக்கப்படுவதல்ல, மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்.
விஜய்யின் அரசியல் பேச்சுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் பதில் அளிப்பதில்லை என்ற கேள்விக்கு ஆர்த்தி, "விஜய் இப்போதுதான் அரசியலில் சைக்கிள் ஓட்டப் பழகுகிறார். அவர் ஒரு குழந்தை போன்றவர். ஒரு குழந்தையிடம் என்ன சொல்லிக் கொடுக்க முடியும்? அவர் போகப்போகக் கற்றுக் கொள்வார். அவருக்குத் தேவையான அரசியல் பாடங்களை திமுக கற்றுக் கொடுக்கும். அதனால்தான் முதலமைச்சர் அவர் பேசுவதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிப்பதில்லை" என்றார்.