அவசரமாக தனிவிமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்... 'ஜனநாயகன்' சிக்கலைத் தீர்க்க நகர்வா?!

 

தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் செல்கிறார்.  விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவரின் குடும்ப விசேஷத்தில் கலந்து கொள்வதற்காகவே இந்தப் பயணம் என முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே தள்ளிப்போயுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்பையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகின்றன. அங்குச் சில முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க விஜய் அங்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் வெளியீடாக வரவேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனையால் நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக, ராணுவம் தொடர்பான சில காட்சிகள் குறித்து சென்சார் வாரியம் கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

படத்தில் சில காட்சிகளை நீக்கச் சென்சார் வாரியம் அறிவுறுத்தியுள்ளதால், அதற்குப் பதிலாகப் புதிய காட்சிகளைச் சேர்க்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக மும்பையில் ஒரு சிறிய 'பேட்ச் ஒர்க்'  படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் விஜய் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தவெக தீவிரம் காட்டி வரும் வேளையில், விஜய்யின் இந்தப் பயணம் கட்சிப் பணிகளைப் பாதிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.