தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் உத்தரவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!
தமிழகத்தில் நிலவி வரும் மது அரக்கனின் பிடியிலிருந்து இளைஞர்களைக் காக்கும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,829 டாஸ்மாக் கடைகளில், முதற்கட்டமாக 717 கடைகளை உடனடியாக மூட அவர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட கையோடு, போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்த 65 சிறப்புப் படைகளை அமைத்த முதலமைச்சர், தற்போது மதுக்கடைகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள 276 கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இயங்கி வரும் 186 கடைகள் 2 வாரங்களுக்குள் மூடப்படும். அதேபோல், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 256 கடைகளும் அப்புறப்படுத்தப்பட உள்ளன. மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும், பார்களில் நடக்கும் சட்டவிரோத விற்பனை தடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தாலும், மக்கள் நலனே முக்கியம் என்பதை இந்த அறிவிப்பு பறைசாற்றுகிறது. பூரண மதுவிலக்கை நோக்கித் தமிழக அரசு எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவை இல்லத்தரசிகளும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மதுக்கடைகள் மூடப்படுவதன் மூலம் பல குடும்பங்களில் அமைதி திரும்பும் என்றும், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.