திமுகவின் கோட்டையிலேயே கை வைக்கும் விஜய்.. வடசென்னை தான் டார்கெட்.. இன்று பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்!
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சென்னை திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அதற்கேற்ப தங்களது தொகுதிகளை திமுகவின் வேட்பாளர்களும் தொடர்ந்து கட்டிக்காத்து வந்தனர். அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை என்று ஆற்காடு வீராசாமி, சைதை கிட்டு, பழக்கடை ஜெயராமன், ஸ்டாலின், கலைஞர், பேராசிரியர் என்று தொகுதி முழுக்கவே பரிட்சயமானவர்களாகவும், தொகுதி மக்களைப் பரிட்சயப்படுத்திக் கொண்டவர்களுமாக சென்னை எப்போதுமே திமுகவை அரவணைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான்’ சென்னை’க்கு மட்டும் நீங்கள் முதல்வர் கிடையாது.. மொத்த தமிழகத்திற்கும் முதல்வர் என்கிற குரல்கள் ஸ்டாலினை நோக்கி எதிரொலிக்கின்றன.
இந்நிலையில் திமுகவின் கோட்டையை தான் டார்கெட் செய்கிறார் விஜய். திமுகவின் வாக்குவங்கியை சரிப்பது தான் முதல் கொள்கையாக கொண்டு களப்பணியாற்ற சொல்லி உத்தரவாம். iந்நிலையில் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தைப் பெரம்பூர் தொகுதியில் தொடங்குகிறார். விஜய். இத்தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், இந்தப் பிரசாரம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரசாரத்திற்காக வடசென்னையில் தங்குவதற்கு ஏதுவாக, கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் ஒரு பங்களா தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை பெரம்பூரில் நடைபெறும் சிறப்பு பூஜையில் விஜய் பங்கேற்கிறார். அடுத்த 2 நாட்களுக்குப் பெரம்பூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று திறந்த வாகனத்தில் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.
தவெக நடத்திய உள்கட்சி ஆய்வில், பெரம்பூர் தொகுதி விஜய்க்கு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றான இங்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு தவெக-விற்கு அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
விஜய் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் பேசவிருக்கும் அரசியல் கருத்துக்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னையைத் தனது முதல் பிரசாரக் களமாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், அடித்தட்டு மக்களின் ஆதரவைத் திரட்ட விஜய் திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. ஏற்கனவே பெரம்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் (திமுக) மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அங்கு நட்சத்திரப் போட்டி நிலவப்போவது உறுதி.