தவெக கூட்டத்தில் விஜய் - சங்கீதா போஸ்டர்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தஞ்சை ரசிகர்கள் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ள சூழலில், இன்றைய கூட்டத்தில் வைக்கப்பட்ட போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தஞ்சை செங்கிப்பட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட சில ரசிகர்கள், விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை ஏந்தியபடி நின்றனர். தலைவரின் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் தீர வேண்டும் என்ற ஆதங்கத்திலும், இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்ற விருப்பத்திலும் ரசிகர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது எக்ஸ் மற்றும் முகநூல் தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட செய்தி சமீபத்தில் வெளியாகி அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கீதா மீது சமூக வலைதளங்களில் தவெக உறுப்பினர்கள் சிலர் நடத்தி வரும் தனிப்பட்டத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாததற்காக, தவெக தலைவர் விஜய்க்கு மாதர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய கருத்துகளைத் தலைவர் என்ற முறையில் விஜய் கண்டிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், விஜய்யின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் நிர்வாகிகளைச் சந்தித்துக் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் விஜய், மறுபுறம் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளார். இன்றைய கூட்டத்தில் ரசிகர்கள் காட்டிய இந்த 'ஒற்றுமைப் புகைப்படம்', தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள பாசத்தையே காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.