மதுராந்தகத்தில் மாஸ் காட்டிய விஜய்... கிராம மக்களின் வீட்டில் தேநீர் அருந்தி நெகிழ்ச்சி... தவெகவுக்கு குவியும் ஆதரவு!
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரப் பயணம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் விறுவிறுப்படைந்து வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் இன்று தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வழக்கமான அரசியல் தலைவர்களின் பிரச்சார முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், பொதுமக்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடியும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட இந்தப் பிரச்சாரப் பயணம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் இருந்து முதலமைச்சர் விஜயின் தேர்தல் பிரச்சாரப் பேரணி தொடங்குகியது. மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை உள்ள சுமார் 25 கிராமங்கள் வழியாக இந்த வாகனப் பேரணி திட்டமிடப்பட்டது.
வழிநெடுகிலும் உள்ள கிராமப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டு திரண்டிருந்தனர். திறந்த வெளிப் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி கையசைத்து வாழ்த்துப் பெற்ற முதலமைச்சர் விஜய், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், மாமண்டூரை அடுத்த கிராமப் பகுதிகள் வழியாகச் சென்ற போது திடீரென ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது. கிராமத்துச் சாலைகளின் ஓரங்களில் நின்று கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் முதியவர்களைக் கண்டதும், தமது பிரச்சார வாகனத்தை நிறுத்தச் சொன்ன முதலமைச்சர் விஜய், திடீரென வாகனத்திலிருந்து கீழே இறங்கி நேரடியாக மக்களிடம் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த கிராமத்து மக்களிடம் அவர்களின் குடும்ப நலம் குறித்தும், விவசாயப் பணிகள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்தும் அன்போடு விசாரித்து உரையாடினார்.
தலைவரின் இந்த எளிய அணுகுமுறையைக் கண்டு நெகிழ்ந்துபோன அப்பகுதி கிராம மக்கள், தங்கள் வீட்டுக்கு வந்து தேநீர் அருந்துமாறு அன்போடு அழைப்பு விடுத்தனர். அவர்களின் பாசமான அழைப்பை ஏற்று, எந்தவித ஆரவாரமும் இன்றி ஒரு சாதாரண கிராம மக்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
முதலமைச்சர் ஒருவர் கிராம மக்களின் எளிய வீட்டுக்கு நேரில் சென்று தேநீர் அருந்திய இந்நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாகப் பரவி பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அரசியல் களத்தில் தலைவர்கள் பொதுமக்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்று என்றாலும், பதவியில் உள்ள ஒரு முதலமைச்சர் மக்களின் இல்லத்திற்குத் தேநீர் அருந்தச் சென்றது போன்ற செயல்கள் சாதாரண மக்களின் இதயங்களைத் தொடும் வகையிலான அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள இந்தத் தீவிர மற்றும் மக்கள் தழுவிய பிரச்சாரப் பயணம், தேர்தல் களத்தின் போக்கைத் தவெகவுக்குச் சாதகமாக மாற்றும் எனத் தொண்டர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து கிராமங்கள் வழியாகச் செல்லும் விஜயின் பிரச்சாரப் பேரணியால் மதுராந்தகம் தேர்தல் களம் முழுமையாகச் சூடுபிடித்துள்ளது.